Saturday 12 December, 2009

ஒருகாலத்தில் மெட்ராஸுக்கு ஐஸ் அமெரிக்காவில் இருந்து வந்தது…



1833-ல் சென்னை நகருக்கு ஐஸ் இறக்குமதி ஆக ஆரம்பித்தது. எங்கிருந்து? வட அமெரிக்காவில், பாஸ்டன் நகரிலிருந்து. கப்பல் மூலமாக. நேராக கடலில் சில மாதங்கள் பயணம் செய்த கப்பல், சென்னை துறைமுகம் வந்ததும், கப்பலில் இருந்து மசூலா படகுகளுக்கு மாற்றி, கரைக்குக் கொண்டுவந்து, அங்கிருந்து நான்கைந்து பேர் கட்டிகளைத் தூக்கி, கரைக்கு எதிரே இருந்த ஒரு கட்டடத்துக்குக் கொண்டுபோய் வைத்தார்கள்.

அதிலிருந்து கட்டி கட்டியாக, ஐஸ் பிக்கால் உடைத்து, துரைமார்களின் வேலைக்காரர்கள் வாங்கிக்கொண்டு போனார்கள். துரைமார்கள் அந்த ஐஸை ஸ்காட்ச் விஸ்கியில் போட்டுப் பருகிவிட்டு, மிளகு போட்டு வறுத்த கோழிக்காலை கடித்துக்கொண்டார்கள்!

டியூடர் என்ற புத்திசாலி அமெரிக்கப் பையன், பாஸ்டன் ஏரிகளில் குளிர்காலங்களில் பாலம் பாலமாகக் கிடக்கும் ஐஸை வெட்டி எடுத்து, இந்தியாவுக்கும் பல கோடை நாடுகளுக்கும் அனுப்பி காசு சம்பாதிக்கலாம் என்று முடிவுசெய்ததன் விளைவே இந்த ஐஸ் ஏற்றுமதி!

சென்னை மரீனாவில் ஐஸ் ஹவுஸ் என்றும் விவேகானந்தர் இல்லம் என்றும் அழைக்கப்படும் அந்த இடத்தில்தான் 1845 முதல் 1880(?) வரை அந்த இடம்தான் டியூடரின் கம்பெனி ஐஸை வைக்கப் பயன்பட்டதாம்.

1874 முதல் சென்னையில் ‘நீராவி மூலம் ஐஸ் தயாரிக்கும் இண்டெர்நேஷனல் ஐஸ் கம்பெனி நிறுவப்பட்ட’ சில ஆண்டுகளுக்குள்ளேயே டியூடரின் ஐஸ் ஏற்றுமதி வியாபாரம் உருகிவிட்டது.
(இந்தத் தகவல், எஸ்.முத்தையா எழுதி, ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிமாற்றம் செய்துள்ள சென்னை மறுகண்டுபிடிப்பு என்ற நூலில் இருந்து எடுக்கப்பட்டது.)